Saturday, 24 November 2012

ஐந்து வகை நிலம்



ஐந்து வகை நிலம்
முன்னுரை 

      சங்ககாலத் தமிழர், மலைப்பகுதியையும், காடுகள் அடர்ந்த பகுதியையும், வயல்கள் நிரம்பிய பகுதியையும், கடலோரப் பகுதியையும், வறட்சியான வரண்ட பகுதிகளையும், தனித்தனியாகப் பாகுபாடு செய்தனர்.
      மலையும் மலை சார்ந்த பகுதியையும் குறிஞ்சி நிலம் என்று அழைத்தனர். மலைக்கு அடுத்து இருந்த நிலப்பகுதி காடும், காட்டைச் சார்ந்த இடமும். இப்பகுதியை முல்லைநிலம் என்று கூறினர். முல்லைக்கு அடுத்து இருந்த வயலும் வயலைச் சார்ந்த இடத்தை மருதம்என்று குறிப்பிட்டனர்.
பண்டைத் தமிழ்நாட்டின் கிழக்கும், மேற்கும், தெற்கும் கடல் எல்லையாக இருந்தது. இந்தக் கடலையும் கடலைச் சார்ந்த இடத்தையும்நெய்தல் நிலம் என்றனர். பருவகாலத்தில், பெய்ய வேண்டிய மழை பெய்யாமல், வறட்சி ஏற்பட்டு, நிலம் பசுமை இல்லாமல் வரண்டு இருக்குமானால் அப்பகுதியைப் பாலை என்று சுட்டினார்கள்

குறிஞ்சி நிலம்
குறிஞ்சி நிலம் 
குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்களைக் குறவர், குறத்தியர் என்று அழைத்தனர். இவர்கள் தினை பயிரிடுதல், தேன் எடுத்தல், வேட்டையாடல் போன்ற தொழிலைச் செய்தனர். இவர்களது கடவுள் முருகன்.
 
முல்லைநிலம்



முல்லைநிலம்
முல்லை நிலத்தில் வாழ்ந்த மக்கள் ஆயர், ஆய்ச்சியர் எனக் குறிக்கப்பட்டனர். இவர்கள் ஆடு, மாடு மேய்த்தலைத் தங்கள் தொழிலாகக் கொண்டிருந்தனர். முல்லை நிலக் கடவுள் திருமால். திருமாலைக் கண்ணன் என்றும் அழைப்பார்கள். கண்ணனாகிய திருமால் ஆயர்குலத்தில் தோன்றியதாகக் கருதப்படுகிறான்.
 
மருதநிலம்


மருதநிலம்
மருதநில மக்கள் உழவர், உழத்தியர் என்போர் ஆவர். இந்நிலப்பகுதியில் வாழ்ந்த மக்கள், நெல், கரும்பு முதலியவற்றைப் பயிர் செய்தார்கள். வாணிகத்தையும் செய்தனர். மருத நிலத்தில் விளைந்த நெல் முதலிய தானியங்களைப் பிற நிலத்தைச் சார்ந்தவர்களுக்குக் கொடுத்து,பண்டமாற்ற வாணிபம் செய்தனர். இந்திரன், மருத நிலக் கடவுள்.
 
நெய்தல் நிலம்

நெய்தல் நிலம்
நெய்தல் நிலத்தில் வாழ்ந்த மக்களைப் பரதர் என அழைத்தனர். மீன் பிடித்தல், உப்புத் தயாரித்தல், கடல்கடந்து வாணிபம் செய்தல் முதலிய தொழில்களை இவர்கள் செய்தார்கள்.
நெய்தல் நிலக்கடவுள் வருணன். மழைதரும் கடவுளாக வருணனை வழிபாடு செய்தனர். வருண பகவானால் மழைவரும் என்று நம்பினர். கடல்நீர், சூரிய வெப்பத்தால் நீராவியாக மாறி, மழையைத்தரும் மேகம் ஆகிறது. மழை தோன்றுவதற்குக் காரணமாக நெய்தல் நிலம் இருப்பதால், மழைக்கு உரிய காரணகர்த்தாவாக வருணனை வழிபட்டனர்.
 
பாலை

பாலை

பாலை நிலத்தில் வாழ்ந்தவர்கள் எயினர், எயிற்றியர் என்று கூறப்படுகின்றனர். வழிப்பறி செய்தல் அவர்கள் இயல்பாகச் சுட்டப்படுகிறது. நிலம் வமில்லாது வறட்சியாகும்போது நிலத்தில் வாழ்வோரும் தம் வறுமையின் காரணமாக இத்தகைய செயல்களில்ஈடுபட்டிருக்கலாம்.

நன்றி http://www.tamilvu.org

3 comments: